Vipulananda Adigal

Vipulananda Adigal

சைவத்தமிழ் பேராசான்

சுவாமி விபுலாநந்தர்

Swami Vipulanandar

(1892-1947)

 

ங்கம் கண்ட செந்தமிழின் திருநூல்கள் பலவற்றைத் தம் சலியாப் பேருழைப்பால் தந்து மகிழ்ந்த தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர், சேர நாட்டு ஞானச் செல்வர் இளங்கோ அடிகள் அருளிய சிலப்பதிகாரத்தை முழு உருவத்துடன் முயன்று பதிப்பித்து வெளியிட்ட விழுமிய ஆண்டு 1892.

ஆம்; ஒரு நூற்றாண்டுக்கு முன், நெஞ்சை அள்ளும் சிலம்பின் சிறப்பைத் தமிழர் முழுமையாக அறிந்திலர். முத்தமிழ்த் திறத்தையும் முழுதுணர்த்திய இளங்கோவின் வித்தகக் காப்பியத்தை, முழுமையாகப் பெற்றுச் சுவைத்த தமிழுலகம், பெருமிதம் கொண்டது; பெறற்கரிய பேற்றினை அடைந்ததாய்ப் பெரிதும் மகிழ்ந்தது என்றாலும், அடிகள், தம் காப்பியத்துள் இசைத்தமிழ் நுணுக்கங்களை எடுத்துரைக்கும் பகுதியின் இயல்பினை எளிமையாகவும், முழுமையாகவும் அறியாது, சற்றே அயர்ந்து மயங்கவும் செய்தது.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அறிஞர் பெருமான் அடியார்க்கு நல்லார் வாழ்ந்த காலத்திலேயே,பழமையான இசை, நாடகத் தமிழ் நூல்கள் பல, வழக்கற்று மறைந்துபோன அவல நிலையை, அப் பெருமானின் உரைப்பாயிரத்தால் அறிகிறோம்.

இத்தகைய நிலையில், இடர்ப்பாடின்றிச் சிலப்பதிகாரத்தைப் பயில்வோர் அனைவரும், இசைப் பகுதிகளைச் சற்றே கடந்து கற்பது வழக்கமாக இருந்தது; இன்னும் சொல்லப் போனால், பல்கலைக் கழகத்தார் சிலப்பதிகாரத்தைப் பாடமாக அமைக்கும் போது, அரங்கேற்றுக் காதையை அப்பால் நீக்கிப் பாடத்திட்டத்தை வகுத்து வழங்குவது பழக்கமாகவும் நின்றது.

இந்நிலையினை ஆழ்ந்து எண்ணிப் பார்த்து, அகத்துள் கவலை கொண்டது ஒரு தமிழ் உள்ளம்! 'முடிச்சினை' அவிழ்த்து, முடங்கிக் கிடக்கும் பொருளினைத் தெளிவுபடுத்த,அந்தத் தமிழுள்ள்ள அடிகோலியது; ஆராய்ந்தறியப் பேரார்வம் கொண்டது. ஓராண்டா? ஈராண்டா? தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள்! வேட்கையுடனும், வீறுகொண்ட பேராற்றலுடனும், ஓய்வின்றி, உறக்கமின்றி, மெய்வருத்தம் பாராது, வேறு பணிகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளி; நாளும் பொழுதும் உழைத்து, உள்ளாய்ந்து, இசை நூல் பொருள்களை எல்லாம் அறியுமாறும், புரியுமாறும் விளங்கவைக்கும் 'இசைத்தமிழ் ஞானக்கதிரை' ஏற்றி வைத்தது அந்தத் தமிழ் பேருள்ளம்!

பேருள்ளத்தை உடைமையாகப் பெற்ற பெரியார், சுவாமி விபுலாநந்தர்!

அப்பெரியார் ஏற்றி வைத்த ஞானக்கதிர் - யாழ் நூல்.

யாழ் நூல் அரங்கேறிய ஆண்டு - 1947.

அரங்கேற்றத்தில் பங்கேற்று, நூலின் அருமையுணர்ந்து போற்றிப் பாராட்டியோர்: இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், சுவாமி சித்பவாநந்தர், புரவலர் பெருமான் பெ. ராம. ராம. சித. சிதம்பரம் செட்டியார், மற்றும் பலர்.

அரங்கேற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற இசைக் கருவிகள் யாழ் நூலின் கணக்குப்படி அமைந்த பண்டைத் தமிழரின் மறைந்தொழிந்த யாழ்கள், முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டி வீணை, 'நரம்பின் மறை' எனத் தொல்காப்பியரும், 'இசையோடு சிவணிய யாழின் நூல்' எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்ட யாழ் நூற்பொருள் இருந்த இடமும் தடமும் தெரியாது மறைந்தொழிந்த நாளில், பெரும் புலமையால், பேராற்றல் மிக்க ஆய்வுத் திறத்தால், பெற்றிருந்த இசை நுணுக்கத்தால், பழந்தமிழ் யாழ்க் கருவியினை மீண்டும் உருவாக்கிப் பண்டையோர் வளர்த்த இசை நலங்களையெல்லாம் கேட்டு மகிழுதற்குரிய இசைத்தமிழ் முதல் நூலாக 'யாழ் நூல்' உருவாக்கித் 'தமிழ்ப் பெருங்கொடை'யாக வழங்கினார் சுவாமி விபுலாநந்தர். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில், யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்த விரிவுரையாகவும், விளக்கமாகவும் அமைந்தது யாழ் நூல்! கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிட்ட சுவாமிகளின் யாழ் நூல், ஆயிரம் ஆண்டுகளாக வழக்கற்று மறைந்த இசைத்தமிழின் அருமையைத் தமிழர் உணர்ந்து பெருமை கொள்ளச் செய்தது. சுவாமி விபுலாநந்தரின் செயற்கரிய தமிழ்த் தொண்டு, தமிழறிஞர்களின் பாராட்டிதலையும் போற்றுதலையும் பெற்றுத் தனிப்புகழ் பெற்றது.

தேசப் பற்றும், தெய்விகப் பற்றும் கொண்டிருந்த சுவாமிகள், மகாகவி பாரதியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 'பாரதியின் எழுத்துகள் மனித நேயத்திற்கு வழிகாட்டும் கைகாட்டிகள்' என்றும், 'பாரதியின் கருத்துகள், இந்திய நாட்டின் மலர்ச்சிக்கு ஒளியூட்டும் கதிர்ச் சுடர்கள்' என்றும், 'பாரதியின் எண்ணங்கள்', தமிழ் மொழிக்குப் புதிய வண்ணங்கள் தீட்டிய தூரிகைகள்' என்றும் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் பாரதி பற்றிய தம் கணிப்பை அற்புதமாகச் சித்தரித்துள்ளார். மகாகவி பாரதியின் பாடல்கல்லி இழையோடும் இனிமையும், எளிமையும் விபுலாநந்தரின் பல செய்யுள்களில் மலர்ச்சி பெற்று, மணங்கமழும் தாக்கத்தைக் காணலாம். எடுத்துக்காட்டாக, க்டவுள் வணக்கப் பாடலொன்றைச் சுவாமிகள் இயற்றியுள்ள இயல்பினைப் பார்த்தால், படித்தால் தெளிவு பெறலாம்.

"வெள்ளைநிற மல்லிகையோ?

வேறெந்த மாமலரோ?

வள்ளல் அடியிணைக்கு

வாய்த்த மலரெதுவோ?

வெள்ளைநிறப் பூவுமல்ல!

வேறெந்த மலருமல்ல!

உள்ளக் கமலமடி

உத்தமனார் வேண்டுவது!"

மகாகவி பாரதியின் பாடல்களை ஈழ நாட்டில் பற்றிப் பரவிடச் செய்த சுவாமிகள், அரசாங்க அடக்கு முறைக்கு அச்சப்படாது, தமிழ் நாட்டில் நிகழ்ந்த பாரதி விழாக்களுக்குத் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார்.

கிழக்கு இலங்கையில், வாழையடி வாழையென வந்த பழங்குடி மரபில், காரை தீவின் காரேறு மூதூர், இசைத்தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலாநந்தரைப் பெற்றெடுத்த பெருமை பெற்றது. சாமித்தம்பியார் வேளாளர் குடியில் விளங்கு புகழ் பெற்ற நல்ல மனிதராய்க் கண்ணம்மை எனும் வாழ்க்கைத் துணையுடன் நடத்திய குடும்ப வாழ்வில், அக்குலம் சிறக்க விபுலாநந்தர் தோன்றினார். ஆண்டு 1892 - அந்த ஆண்டிலே தான் சிலப்பதிகாரத்தை, உ.வே.சா.வின் உயரிய உழைப்பால், தமிழ்ச் சமுதாயம் முழுமையாகக் கண்டு களித்தது. பின்னொரு காலத்தில், சிலம்பின் இசைத்தமிழ் நுட்பத்தை எடுத்தியம்பவுள்ள பெருமகனையும் அதே ஆண்டு பிறப்பித்துச் சிறந்தது.

சாமித் தம்பியார் தம் புதல்வனுக்கு 'மயில்வாகனன்' எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். பள்ளிப் பருவம் அடைந்ததும் மயில்வாகனன், குஞ்சித் தம்பி எனும் ஆசானிடம் பாடங் கேட்டதோடு, தந்தையாரிடமும் தாய் மாமன் வசந்தரா பிள்ளையிடமும் கற்கும் வாய்ப்புப் பெற்றான். காரை தீவின் பிள்ளையார் கோயிலில் பட்டகையராப் பணியாற்றி வந்த வைத்தியலிங்க தேசிகர், தமிழ் மொழியுடன் வடமொழியறிவும் பெற்று விளங்கியதை அறிந்த சாமித் தம்பியார், மயில்வாகனன் அப்பெருந்தகையிடம் பயில்வதற்கு அனுப்பினார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை, தேசிகரிடம் தெளிவுறக் கற்ற மயில்வாகனன், செய்யுள் இயற்றும் திறத்தைத் தம் பன்னிரண்டாம் வயதிலேயே பெற்றிருந்தான். மயில்வாகனன் தனது கல்விக்கு வித்திட்ட தன் ஆசிரியர் குஞ்சித்தம்பி அவர்களை தனது செய்யுள் திறத்தினால் வாழ்த்தினார்:

"அம்புவியிற் செந்தமிழோ

டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவுதீட்டி

வம்பு செறி வெண்கமல

வல்லியருள் எனக்கூட்டி வைத்த குஞ்சுத்

தம்பியென்னும் பெயருடையோன்

தண்டமிழின் கரைகண்த தகமையோன்றன்

செம்பதும மலர்ப்பதத்தைச்

சிரத்திருத்தி எஞ்ஞான்றும் சிந்திப்பேனே"

அக்காலத்தில் சென் மைக்கல் கல்லூரியில் அதிபராக இருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வண பொனெல் என்பவராவர். இவர் கணித பாடத்தைப் போதிப்பதில் ஆற்றல் மிகுந்தவர். மயில்வாகனனாரின் கணித திறமைக்கு வித்திட்டவர் இக் குருவானவர். இக்கல்லூரியில் இருந்து பதினாறாவது வயதில் கேம்ப்றிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதன்மையாகத் தேறினார். தாம் கற்ற கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. பின்னர் கல்முனை மெதடிஸ்த பாடசாலையிலும் ஆசிரியராக இருந்தார். பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெறுவதற்காக 1911ஆம் ஆண்டு கொழும்பு வந்தார். 1912ஆம் ஆண்டு ப்யிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார்.

மொழித்துறையிலும் இலக்கியத்துறையிலும் மட்டுமன்றி விஞ்ஞானத் துறையிலும் தனது திறமையை வெளிக்காட்ட மயில்வாகனனார் பின்னிற்கவில்லை. 1915ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் பொறியியற் கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.

இளமையிலேயே இறை பக்தியில் ஈடுபாடு கொண்டிருந்த மயில்வாகனன் தம் கிராமத்திலிருந்த கண்ணகி கோயிலுக்கு நாளும் சென்று வழிபாடு செய்து வந்தார். அப்போது மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் இலங்கையிலேயே முதன் முதலில் பங்கு பற்றி, முதன்மைத் தகுதி பெற்றார்.

இயல்பாகவே இறை நாட்டம் கொண்டிருந்த மயில்வாகனன் 'ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன்', சமயத்திற்காக ஆற்றி வரும் பணிகளை அறிந்து, தம்மையும் அந்த அமைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளலாமென எண்ணியிருந்த வேளையில், இலங்கைக்கு சுவாமி சர்வானந்தர் வருகை புரிந்தார். சர்வானந்தரின் தொடர்பு மயில்வாகனனின் உள்ளத்துள் 'திறவுத் தூய்மை' எனும் திருவிளக்கை ஏற்றி வைத்தது.

ஆங்கிலப் பள்ளியில் விஞ்ஞான அறிவு பெற்றிருந்த மயில்வாகனன் 1920-ஆம் ஆண்டு மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியரானார். மனத்தை ஈர்ந்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன்.

'பிரபோத சைதன்யா' எனும் தீட்ஷா நாமத்தைப் பெற்று, 1924 ஆம் ஆண்டு சுவாமி சிவானந்தர் ஞான உபதேசம் அருள 'சுவாமி விபுலாநந்தர்' என்ற திருப் பெயர் பெற்றார் மயில்வாகனன். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் திறமும் உரமும் பெற்றிருந்த சுவாமி விபுலாநந்தர் 'ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம்' எனும் தமிழ் இதழுக்கும், 'வேதாந்த கேசரி' எனும் ஆங்கிலத் திங்கள் வெளியீட்டிற்கும் ஆசிரியர் ஆனார். சுவாமிகளின் பேரறிவுத் திறத்தையும், பெருங்கருணை இயல்பினையும் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது.

இலங்கையில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் நடத்தி வந்த பள்ளிகளை எல்லாம் சீரோடும் சிறப்போடும் நிர்வகித்து வந்த விபுலாநந்தர், மட்டக்களப்பில் ஆங்கில அறிவியல் கல்வியைப் போதிக்க 1929-ம் ஆண்டில் சிவானந்த வித்தியாலயத்தை நிறுவினார். யாழ்ப்பாணம் 'ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் என்றோர் அமைப்பைத் தொடங்கி வைத்து, பிரவேஷாசப் பண்டிதத் தேர்வு, பால பண்டிதத் தேர்வு, பண்டிதத் தேர்வு ஆகிய தேர்வு முறைகளை ஏற்படுத்தி, தமிழ் மொழி வளர்ச்சிக்கு, தக்க நெறிகளை வகுத்தளித்தார்.

செட்டி நாட்டாரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1931 ஆம் ஆண்டு தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றுடன் இலத்தீன், யவனம், வங்கம், சிங்களம், அரபி முதலாய பன் மொழிப் புலமை பெற்றிருந்த சுவாமி விபுலாநந்தர், 'ஆங்கிலவாணி', 'விவேகானந்த ஞானதீபம்', 'கர்மயோகம்', 'ஞானயோகம்' முதலிய பல மொழி பெயர்ப்பு நூல்களை ஸ்ரீ இராமகிருஷ்ண மடாலயத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் நடைபெற்ற தேசிய தெய்வீக மொழியுணர்வு தழைத்துச் செழிக்கத் தம் உரையாற்றலை உரமாக்கினார் சுவாமிகள்.

'பிரபுத்த பாரத' எனும் இதழிற்கு ஆசிரியரான சுவாமிகள், இமயமலைச் சாரலில் உள்ள மாயாவதி ஆசிரமத்தில் தங்கினார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது.

யாழ்நூல் அரங்கேற்றத்திற்குப் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பிய சுவாமிகள், கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெறலானார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ம் நாள் (19/07/1947) சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாமி அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணியும், அவர் உருவாக்கிய தாபனங்களும் காலத்தால் மறையாது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் இருக்கும் வரை முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் திருநாமமும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

எழுதியவர்: குன்றக்குடி பெரியபெருமாள்